"பட்டினப்பிரவேசம்" படத்தில் ஒரு அழகான பாடலை எழுதி அசத்தினார் கவியரசர் கண்ணதாசன், அந்தப் பாடல்... ‘வான் நிலா நிலா அல்ல... உன் வாலிபம் நிலா’.
எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட மெட்டு... கவியரசர் கண்ணதாசனின் வரிகள்... எஸ்.பி.பி.யின் தேன் தடவிய குரல்... என மூன்றும் கலந்து முக்கனியாய் தித்தித்த பாடல்... இப்போதும் எப்போதும் தித்திக்கும் பாடல்...
பாடலின் தொடக்கத்தில் வரும் வயலின் நம்மை என்னவோ செய்யும். பாட்டு முழுவதும் வயலினின் ராஜாங்கம்தான். ‘நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா’ என்று எழுதினார் கவிஞர்.
‘வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா. தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா.. நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா? என்பார். பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா? என்று கேட்பார். தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா? என்ற சொல் வியக்கவைக்கும். தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா? பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா? என்று எல்லாவற்றையும் ‘லா’ போட்டு முடிப்பார்.
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா? தீதில்லா காதலா ஊடலா கூடலா? அவள் மீட்டும் பண்ணிலா? என்பார். கூடவே, வயலினும் பாடிக்கொண்டிருக்கும். வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா? ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா? அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா? என்று பாடும் போது, எஸ்.பி.பி. குழைவார். ‘அருளிலா’ எனும் போது சிலிர்ப்பார்.
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்? அதைச் சொல்வாய் வெண்ணிலா! என்று வியந்தும் மகிழ்ந்துமாக காதலையும் இசையையும் கொண்டு வந்து நமக்குள் கடத்திவிடுவார் எஸ்.பி.பி.
77ம் ஆண்டு,செப்டம்பர் 9ம் தேதி வெளியான பட்டினப்பிரவேசம் படத்தின் ‘வான் நிலா நிலா அல்ல’ பாடல் தனி கிக். தனி சுகம். தனி சந்தோஷம். நமக்கும் இந்தப் பாடலுக்குமான தனி உறவு. பாடல் வெளியாகி, 45ஆண்டுகளாகின்றன.
இப்படியொரு பாடலை வேண்டுமென்று கேட்ட பாலசந்தர், அதற்கு அப்படியொரு டியூனை போட்டுக் கொடுத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், அழகான டியூனுக்கு அட்டகாசமாக பாடலை எழுதிக் கொடுத்த கவியரசர் கண்ணதாசன், காதலையும் கவிதையையும் குழையக்குழையக் குரலில் இழைத்து இழைத்துக் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம்... !